Designed and built with care, filled with creative elements

Top
Image Alt

வாழ்க்கை

  /  வாழ்க்கை

வாழ்க்கை

பேராசிரியர் க. த. திருநாவுக்கரசு

இருபதாம் நூற்றாண்டின் தமிழாய்வுலகில் குறிப்பிடத்தகுந்த தமிழறிஞர்களுள் பேராசிரியர் க.த.திருநாவுக்கரசும் (1931-1989) ஒருவராவார். பன்மொழி அறிஞராகவும் பல்துறை வல்லூநராகவும், பன்னூலாசிரியராகவும் விளங்கிய பெருந்தகை அவர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான தமிழாய்வு அனுபவத்தைக் கொண்ட அவர் சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்திருக்கிறார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பயிற்சி ஆசிரியராகவும், சென்னை மாநிலக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும், சென்னை மணலி தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும் விளங்கிய அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் திருக்குறள் ஆராய்ச்சிப் பிரிவில் பேராசிரியராகவும் திகழ்ந்து அரும்பணியாற்றியுள்ளார். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகவும் மற்றும் இயக்குநர் (ஆராய்ச்சியியல்) ஆகவும் இருந்து சீரிய தமிழ் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளார்.

திருக்குறள் ஆய்வுகள், வரலாறு-பண்பாட்டு ஆய்வுகள், பாரதியியல் எனத் தமிழாய்வின் பல நிலைகளிலும் முத்திரை பதித்தவர். அவரது நூல்களில், திருக்குறள் நீதி இலக்கியம், சிந்துவெளி தரும் ஒளி, இனமரபு வரலாறு, தமிழர் நாகரிக வரலாறு, நாகரிகமும் பண்பாடும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ் பண்பாடு, திருக்குறளில் கற்பனைத் திறனும் நாடக நலனும், தமிழ்க்கவிதையில் பாரதியின் தாக்கம் முதலியன குறிப்பிடத்தக்கன.

சென்னைப் பல்கலைக்கழத்தின் பேரவைக்குழு, கல்விக்குழு ஆகியவற்றின் உறுப்பினராகச் செயலாற்றியுள்ள பேராசிரியர் க.த.திருநாவுக்கரசு தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் திகழ்ந்திருக்கிறார். அளப்பரிய பங்களிப்புகளை தமிழியல் ஆய்வுலகிற்கு நல்கிய அவரது பணிகள் இந்திய அளவிலும், தமிழக அளவிலும், அயல் நாடுகளிலும் போற்றப்பட்டு வருகின்றன.

பெற்ற விருதுகள்

18.08.1954 அன்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், TK FRANKLIN GELL MEDAL பி.ஏ. ஹானர்ஸ் (எம்.ஏ) படிப்பில் முதல் வகுப்பு – முதல்நிலை பெற்றமைக்காக வழங்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டு, அவர் எழுதிய, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வெளியீடான திருக்குறள் நீதி இலக்கியம் என்ற நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

1985 ஆம் ஆண்டு, சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

20-11-1931 ஆம் ஆண்டு, கருங்குழி கிராமம், மதுராந்தகம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்து, சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்து, மயிலாப்பூர் இராமகிருஷ்ணா மிஷன் – விவேகானந்தா கல்லூரியில் புதுமுக வகுப்பும், இளங்கலை (ஹானர்ஸ்) பச்சையப்பன் கல்லூரியிலும் படித்து, சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முதல் நிலையில் தேர்ச்சி பெற்றதன் காரணமாக ஃபிராங்கிலின் ஜெல் விருது பெற்று (1951-1954), பின்னர், முதுகலை வரலாறு சென்னைப் பல்கலைக்கழகத்தில் (1956), முடித்ததுடன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆராய்ச்சியில் “பழந்தமிழ் இலக்கியத்தில் அறம்” (ஆங்கிலத்தில்) (1963) பட்டமும், அப்பல்கலைக்கழகத்திலேயே மொழியியல் பெருஞ்சான்றும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் “பேராசிரியர் மு.வரதராசனாரின் படைப்பு இலக்கியம் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து 1984-ல் முனைவர் பட்டமும் பெற்றார்.

ஆசிரியர் பணி

6 ஆண்டுகள் பயிற்சி ஆசிரியர், மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, 1954-1959

7 ஆண்டுகள் துணைப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி, சென்னை, 1962-1968

2 ஆண்டுகள் முதல்வர், மணலித் தமிழ்க் கல்லூரி, சென்னை, 1968-1969

3 ஆண்டுகள் திருக்குறள் ஆராய்ச்சித் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், 1969-1972

18 ஆண்டுகள் இணைப் பேராசிரியர் மற்றும் இயக்குநர் (ஆராய்ச்சியியல்), உலக தமிழாராய்ச்சி நிறுவனம், 1972-1989

தமிழ் இலக்கிய வகுப்புகள்

வள்ளுவர் கழகம் சார்பில் புதுக்கோட்டையில், சென்னையில் சர். தியாகராயா கல்லூரி (வன்னியம்பதி), கோகலே மண்டபம் (பவழக்காரர் தெரு), YMIA மண்டபம், (பிராட்வே), வேதாந்த சங்கம் (சிந்தாதிரிப்பேட்டை), திரு.வி.க. தமிழ்க்கல்லூரி (இராயப்பேட்டை), நக்கீரர் கழகம்,வள்ளுவர் கோட்டம் ஆகிய இடங்களில், ஆண்டுதோறும் அவர் நடத்திய தொல்காப்பியம், நன்னூல், புறநானூறு, அகநானூறு, திருக்குறள் பாடங்களின் இலவச வகுப்புகளின் மூலம், புலவர் பட்டம் பெற படித்துக் கொண்டிருந்தோர், இளங்கலை (தமிழ்), முதுகலை (தமிழ்) மாணவர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் பயன்பெற்றுள்ளனர்.
அயல் நாட்டவர்க்கும் இவர் தமிழ்ப்பயிற்றுவிப்பு வகுப்புக்களை நடத்தியுள்ளார்.

கருத்தரங்குகள்

தமிழ்நாடு, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், தில்லி, மும்பை, குஜராத், லக்னோ, இலங்கை ஆகிய இடங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றை சமர்ப்பித்துள்ளார்.
பல அறக்கட்டளை சொற்பொழிவுகளும் ஆற்றியுள்ளார்.

முனைவர் க.த.திருநாவுக்கரசு அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள்

1) பேராசிரியர் திரு ப.மகாலிங்கம்

2) பேராசிரியர் திருமதி பொன்மணி வைரமுத்து

3) பேராசிரியர் திரு மு.சுதந்திர முத்து

4) பேராசிரியர் திரு. மு.அ.மாணிக்க வேலு

5) பேராசிரியர் திருமதி பி.வெ.பொன் சுசீலா

6) பேராசிரியர் திருமதி சு.தமிழ்ச்செல்வி

7) பேராசிரியர் திருமதி அஞ்சலா ரிச்சர்ட்

8) பேராசிரியர் திருமதி சாந்தகுமாரி

9) பேராசிரியர் திரு சக்திவேல்